செவ்வாய், 25 டிசம்பர், 2012

தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா?



கேள்வி: தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? கூடுமா?

பதில்: தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம். நடத்தினால் கூடும். அவர் செய்த பாவத்தை மன்னிப்பது இறைவனின் கிருபையை பொறுத்ததாகும். அவருக்கு சுவனம் ஹராம் என்று ஹதீஸில் வந்துள்ளது உண்மை. ஆனால் அவருடைய பிற நல்ல அமல்களை வைத்து அல்லாஹ் பிழை பொறுக்க போதுமானவன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டபோது அவர் செய்த வேறு நல்ல அமல் காரணமாக பிழை பொறுக்கப்பட்டுள்ளார், நபிகளாரும் அவருக்காக பாவமன்னிப்பு வேண்டினார்கள் என்ற ஹதீஸ் முஸ்லிமில் காணக் கிடைக்கிறது.
இமாம்கள், புகஹாக்கள் தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை உண்டு என தீர்மானித்துள்ளார்கள்! காரணம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எல்லா முஸிம்களுக்கும் ஜனாஸா தொழுகையை நடைமுறைபடுத்தினார்கள். இன்னாருக்கு தொழுகை நடத்தவேண்டாமென வதிவிலக்கு செய்யவில்லை.

   ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அவருடைய பாவம் அவரைச்சாரும். அதற்காக ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்யும் ஜனாஸா தொழுகை என்ற உரிமையை செலுத்தாமல் இருக்கக் கூடாது. ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அது பெரும் பாவமாக இருந்தாலும் அவர் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறுவதில்லை அவர் முஸ்லிம்தான்! மற்ற பெரும் பாவிகள் எப்படியோ அப்படித்தான் தற்கொலை செய்து கொண்டவரும். வட்டி முதலாளிகளுக்கும், விபச்சாரத்தில் ஈடுபடுவோருக்கும், இன்னும் சொல்லப்போனால் காலமெல்லாம் தொழுகையை விடுபருக்கும், இவர் போன்றோருக்கு எல்லாம் ஜனாஸா தொழுகை நடத்துகிறோம். அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஷரீஅத்தில் தடையுமில்லை. இவர்களது வரிசையில் உள்ளவர் தான் தற்கொலை செய்து கொண்ட பாவியும். இவருக்கு தொழுகை நடத்துவதை மட்டும் ஏன் தடுக்க வேண்டும்?
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தற்கொலை செய்து கொண்ட ஒருவருக்கு தொழுகை நடத்தவில்லை என்ற அறிவிப்பு உண்மை தான்.
அவர்கள் ஏன் தொழுகை நடத்தவில்லை? முஸ்லிம்களில் தற்கொலை செய்து கொள்வது என்றாவது நடைபெறும் பாவச் செயல். மற்ற பாவங்கள் சகஜமாக நடைபெறுகின்றன. என்றாவது நடைபெறும் அந்த பாவம் சகஜமாகிவிடக்கூடாது. அது விபரீதமான பாவச் செயல் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே அண்ணலார் தொழுகை நடத்த முன்வரவில்லை. கண்டிப்புக்காக அவ்வாறு செய்தார்கள். ஆனால் தற்கொலை செய்து கொண்டவருக்கு தொழுகையே நடைபெறவில்ல! என்பதற்கோ எவரும் தொழவைக்க வேண்டாம் என நபிகளார் தடுத்ததாகவோ ஆதாரம் இல்லை!
நபிகளார் செயல்கள் சில சமயம் தக்க காரணங்கள் அடிப்படையில் அமையும். அந்தக் காரணங்கள் அவர்களுடைய புனிதமான செயல்பாடுகளுடன் சம்பந்தப்பட்டதாகும். பிறருக்கு அவை சட்டமாக இருக்காது.
தற்கொலை செய்து கொண்டவருக்கு நபிகளார் ஜனாஸா தொழுகை நடத்தாதது போலவே கடனாளிக்கும் ஒரு முறை தொழுகை நடத்தவில்லை. கடனைச் செலுத்துவதன் கடமையை மக்கள் அறிவதற்காக அதில் கவனமுடன் இருப்பதற்காக அவ்வாறு செய்தார்கள். ஆனால் மற்ற எவரும் கடனாளிக்கு தொழுகை நடத்துவதை நபிகளார் தடை செய்யவில்லை. கடனாளிக்கு நபிகளார் தொழவைக்கா விட்டாலும் நாம் தொழுகை நடத்தலாம் என்பதில் அனைவரும் ஒருமித்திருக்கிறோம். இப்படி இருக்க தற்கொலை செய்து கொண்டவருக்கு தொழுகை நடத்துவதை மட்டும் ஏன் நாம் தடுக்க வேண்டும்? கடனுடைய (அவசியத்தை) சீரியஸ் நிலையை நபிகளார் உணர்த்த ஜனாஸா தொழுகை நடத்தாது போல்தான் தற்கொலையின் விபரீத்த்தை உணர்த்த தொழுகை நடத்தவில்லை. நபிகளார் இஸ்லாமிய சமுதாயத்தின் முதுபெறும் தலைவர்! வழிகாட்டி! சன்மார்க்க தூதராகவார். அவர்கள் தொழுகை நட்துவதற்கும் நாம் தொழுகை நடத்துவதற்கும் வேறுபாடு உண்டு. அவர்கள் தொழுகை நடத்தினால் தற்கொலை சாதாரண பாவம் என்பதாகிவிடலாம், அதன் விபரீதத்தை மக்கள் உணர முடியாமல் போகலாம். எனவே தான் அவர்கள் அதை தவிர்த்தார்கள். வேண்டுமானால் சமுதாயத்தில் உள்ள வழிகாட்டிகள், முன்னோடிகளாக இருப்போர்கள் தற்கொலை செய்து கொண்டவர் தொழுகையில் கலந்து கொள்வதை தவிர்க்கலாம். அஃதன்று அனைத்து மக்களும் ஜனாஸா தொழுகையில் ஈடுபடாமல் இருக்கக் கூடாது.

عن أبي هريرة أن رسول الله صلى الله عليه و سلم قال : صلوا خلف كل بر وفاجر وصلوا على كل بر وفاجر
நீங்கள் நல்லவர், தீயவர் அனைவருக்கும் தொழுகை நடத்துங்கள் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜனாஸா தொழுகை நடத்த நல்லவர் தீயவர் என நாம் பார்க்க வேண்டியதில்லை என்பது இந்த ஹதீஸில் புலனாகிறது. எனவே தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை உண்டு என்பதே ஷரீஅத்தின் இறுதித் தீர்ப்பாகும். அதை ஏற்று நடப்பது எல்லா முஸ்லிம்கள் மீதும் அவசியமாகும். மையித்தை வைத்துக் கொண்டு தொழவைக்கலாமா? வேண்டாமா? என்ற வீண் தர்க்கங்களிலும், சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடுவதை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
                                                    அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்