புதன், 21 நவம்பர், 2012

மார்க்க விஷயத்தில் நெறிமுறையை கடைபிடிக்க கணவன் வலியுறுத்துவதற்காக ஒரு பெண் விவாகரத்து கேட்கலாமா?


கேள்வி:

ஒரு பெண் தன் அண்ணன் மகன் வீட்டிற்கு வந்திருக்கும்போது, நைட்டியுடன் இருக்கலாமா? இதில் கணவனுக்கு விருப்பமில்லாத நிலை உள்ளது! பையன் வயது19.
ஒரு பெண் தன் அண்ணன் மகன் சுமார் 19 வயது பையனையும், அவனது 8 வயது தங்கையையும் மற்றும் அவர்களுடன் 13வயதுக்கு வந்த மகளையும் வீட்டில் தங்கவைத்து வெளியில் செல்லலாமா?
மற்றும், இது போன்ற மார்க்க விஷயத்தில் நெறிமுறையை கடைபிடிக்க கணவன் வலியுறுத்துவதற்காக ஒரு பெண் அதிருப்தி அடைந்து ஒரு பெண் விவாகரத்து கேட்கலாமா?

பதில்:

மேற்கானும் கேள்வியில் உள்ளபடி,
நைட்டி இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டில் அணிந்து கொள்ளும் பொதுவான உடையாக உள்ளது. அண்ணன் மகன்(மருமகன்) மேற்படி பெண்ணுக்கு மஹ்ரமாக உள்ளதால் (அவர் முன் நைட்டியுடன் நிற்பது) மார்க்கத்தில் தடை ஏதுமில்லை. ஆயினும், இது விஷயத்தில் கணவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவது பெண்ணின் கடமையாகும்.
ஒரு நல்ல மனைவி, கணவன் இடும் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பாள் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
மற்றும், மகள் வயதுக்கு வந்துள்ள நிலையில் அண்ணன் மகன் உடன் இருப்பது ஹராமாகும். அந்த அண்ணன் மகனின் தங்கை அவனுடன் (அண்ணன் மகனுடன்) இருந்தாலும் சரியே! எவ்வளவு காலம் அவர்கள் பழகியிருந்தாலும் ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் ஹிஜாபுக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும்.
ஹஜ்ரத் அனஸ்(ரலி) அவர்கள் சிறுவயது முதலே நபியின் வீட்டுக்கு பணியாளராக வந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் வயதுக்கு வந்ததும் அவர்களுக்கும் நாயகத்தின் துனைவியாருக்குமிடையே திரை விழுந்து விட்டது. சத்திய சஹாபாக்களே இந்த அறநெறியை கடைபிடித்துள்ளார்கள். இந்த நவீன காலகட்டத்தில் இந்த நெறிமுறை கடைபிடிப்பது ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பத்திலும் அவசியமாகும்.
மார்க்க விஷயத்தில் கறாராக இருக்கும் போது அதற்கு மனைவி முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அந்த விஷயத்தில் மனைவி கறாராக இருந்தால் கணவன் ஒத்துழைக்க வேண்டும். 
அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய சன்மார்க்கத்தை இருவரும் இணைந்து நல்லமுறையில் கடைபிடித்து வந்தால் அத்தகைய மணமக்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக என்று நபிகள் நாயகம் துஆச் செய்துள்ளார்கள்.
எந்த குற்றமுமின்றி ஒருவர் தனது கணவனிடம் தலாக் கேட்டால் அவர் மீது சுவன வாசனை ஹராமாகும் எனவும் கண்மணி நாயகம் கண்டித்துள்ளார்கள்.
பெண் தலாக் கேட்பதால் அவசரப்பட்டு கணவன் தலாக் தந்து விடக்கூடாது. காரணம் அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வுக்கு அதிக கோபம் தரக்கூடியது தலாக் ஆகும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கவனப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நூல்களில் காணப்படுகின்றது.

             அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
            ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்