புதன், 14 நவம்பர், 2012

கடல் வேட்டை! இமாம்கள் ஆய்வு செய்த்து எப்படி


இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் சட்டங்களை கூறும் பாங்கினைச்சிறிது அறிந்துகொள்வோம். அதன் வழியாக இமாம்களின் ஆய்வு முறையை அறிய முற்படுவோம், எடுத்துக்காட்டாக., கடல் வேட்டையும் அதன் உணவும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது என்ற அல்லாஹ்வின் சொல்லைப்பற்றி கூறுகின்ற பாடத்தலைப்பை எடுத்துக்கொள்வோம்.
அதில் வரும் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக நபித்தோழர்களான அபூபக்ர்(ரலி) உமர்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஷுரைஹ்(ரஹ்) போன்றவர்களின் கருத்துக்களையும் தாபியீன்களான நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறை அறிஞர்களான அதாவு(ரஹ்) ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்) போன்றவர்களின் கருத்துக்களையும் இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள், பொதுவாக இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தமது கருத்துக்கு உறுதி சேர்க்கும் முகமாக ஹதீஸ் ஆதாரத்துடன்
 சஹாபாக்கள் தாபியீன்கள் ஆகிய இரு பிரிவினரின் கருத்துகளைக் கூறுவார்கள்.
வசனத்தின் விளக்கம்

கடலில் வேட்டையாடுவதும் ஸய்த் (صيد) அதன் உணவும் தஆம் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதில் கடலில் வேட்டையாடல் என்பதைக்குறிக்க வசனத்தின் மூலத்தில் صيد எனும் சொல் ஆளப்பட்டுள்ளது, அதற்கு வேட்டையாடுதல்,

வேட்டையாடும் பிராணி என்று இரு பொருள்கள் உண்டு. அதைத்தொடர்ந்து طعام உணவு என்ற சொல்லும் வந்துள்ளது,

 இந்தச் சொல்லுக்குப் பொதுவாக உணவு என்று பொருள் இருந்தாலும் இந்த இடத்திற்குப் பொருத்தமாகப் பொருள் கொள்ள வேண்டும், எனவே அல்லாஹ் கூறியுள்ள இவ்விரு வார்தைகளையும் கவனித்து கடலில் தாமே இறந்து கரை ஓதுங்கியவையும் உங்களுக்குஉண்ண அனுமதிக்கப்பட்டுள்ளன என்று பொருள் கொள்ள வேண்டும்,
  இறந்துபோய் கரையில் ஓதுங்கியவை என்பதைக்கொண்டு உப்பிட்ட உலர்ந்து மீன் வகைகளையும் கருத இடமுண்டு என்று அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர்.
 அதாவது புதியவை பழையவை என்ற முறையில் இவ்வாறு கூறலாம் எனவே இந்தச் சொற்களின் மூலம் கடலிலுள்ள அனைத்துப் பொருட்களும் உண்பதற்கு உரியவையே அவற்றில் உண்ணத்தகாதவை என்று எதுவும் கிடையாது என அறிஞர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 அவர்களுள் முக்கியமான இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் கூறுகையில் கடலில் வாழும் முதலை, பாம்பு, ஆமை, நண்டு, தவளை உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் உண்ணலாம் என்கிறார்கள். கடல்வாழ் உயிரினங்களைப் போன்றே ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் வசிக்கும் உயிரினங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள் நீரில் வேட்டையாடுவதும், அதனை உட்கொள்வதும் இஹ்ராம் அணிந்துள்ள உங்களுக்கும் மற்றப் பயணிகளுக்கும் பயன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது, 

அல்லாஹ் கூறுகின்றான்  எனினும் நீங்கள் இஹ்ராமில் இருக்கும் வரை நீர்நிலையில் அன்றி தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது.

 இவ்வசனத்திற்கு மூன்று விதமான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன,
1.                   இஹ்ராமில் இருப்பவர்களே உங்களுக்குக் கடலில் வேட்டையாடுவது அனுமதிக்கப்பட்டும். தரையில் வேட்டையாடுவது தடுக்கப்பட்டும் உள்ளது, இவ்வசனத்தில் வேட்டையாடப்பட்ட பிராணியைப் பற்றிய சட்டத்தை விளக்கிக்காட்டுவது நோக்கமல்ல. இஹ்ராம் கட்டியவர் நீரில் வேட்டையாடலாம் ஆனால் தரையில் வேட்டையாடுவது கூடாது எனினும் தரையில் பிறர் வேட்டையாடிக் கொடுத்தால் அதை உண்ணலாம் என்பதே இதன் விளக்கமாகும் என இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2.                   கடலில் வேட்டையாடுவதும் அந்த வேடைப் பொருளை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது, அதைப் போன்றே இஹ்ரமில் இருக்கும்போது தரையில் வேட்டை யாடுவதும் அந்த வேட்டை பொருளை உண்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
      ஆக கடலில் வேட்டையாடுதல் அதில் கிடைத்த வேட்டைப்பொருள் கடலில் தானாக கரை ஓதுங்கிய உயிரினம் ஆகிய அனைத்தும் அனுமதிக்கப்பட்டவை ஹலால் என்பதைச் சொல்வதும் இந்த வசனத்தின் நோக்கமாகும்.
     இதன்படி கடல்வாழ் பிராணிகள் அனைத்தையும் உண்ணலாம், இதில் இஹ்ராம் கட்டியவர் கட்டாதவர் அனைவரும் சமமானவர்கள் ஆவர். தரையில் வேட்டையாடிய எந்தப்பொருளையும் இஹ்ராமில் இருப்பவர் உண்ணலாகாது. தரையில் மற்றவர் வேட்டையாடிக்கொடுத்தாலும் உண்ணலாகாது என்ற சட்டத்தை இதிலிருந்து இமாம் மாலிக்(ரஹ்) எடுத்துள்ளார்கள்.
3.                   கடலில் வேட்டையாடுவது கூடும். அதில் வேட்டையாடப்பட்ட உயிரினங்களில் தவளை நீங்கலாக மற்ற அனைத்து உயிரினங்களையும் உண்ணலாம், இதில் இஹ்ராம் கட்டியவர், கட்டாதவர் அனைவரும் சமமே இஹ்ராம் கட்டியவர் தரையில் வேட்டையாடுவது கூடாது. அவருக்காக மற்றவர் வேட்டையாடுவதும் கூடாது. அவருக்காக மற்றவர் வேட்டையாடிக் கொடுத்தால் அதை உண்ணவும் கூடாது எனினும் பொதுவாக ஓருவர் வேட்டையாடிக் கொடுத்தால் அதை உண்ணலாம் இது இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் விளக்கமாகும்,
       
 இமாம்கள் ஒவ்வொரும் இவ்வாறு சட்டங்களை ஆய்வு செய்வதற்கு குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ள சொற்களே காரணமாகும், அதை இந்தச் சிறிய விளக்கதில் விரிவாகக் கூற இயலாது,
 அபூஹனீஃபா(ரஹ்) அவர்களின் கருத்து.
  
 இந்த நபி தூய்மையானவற்றை (طيبات) அவர்களுக்கு அனுமதிக்கிறார் தீயவற்றை (خبائث ) அவர்களுக்குத் தடை செய்கிறார். அல்குர் ஆன் 7.157

 என்ற இறைவசனத்தின் மூலம் நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதும், அவர்களின் தகுதியைச் சுட்டிக்காட்டுவதும் அடிப்படை நோக்கமாகும்,
 நபி (ஸல்) அவர்கள் அருவருக்கத்தக்க பொருட்களில் சிலவற்றை வெளிப்படையாக விவரித்துள்ளார்கள், அதைக்கைவிடுங்கள், அதைப்போன்றே நபி(ஸல்) அவர்கள் விவரிக்காத அருவருப்பானவற்றையும் நீங்கள் விலக்கிக்கொள்ளுங்கள், அவற்றை உண்ணாதீர்கள் எனும் எச்சரிக்கை இந்த வசனத்தில் உள்ளது.
 எனவே பாம்பு, முதலை, ஆமை, நண்டு போன்றவை அருவருக்கத் தக்கவை அவற்றை உண்ணலாகாது என்று இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள்.

    நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள் அல்குர் ஆன் 2.172, 7.160.

என்று அல்லாஹ் பல இடங்களில் கூறியுள்ளான்,

        தானாகச் செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டது ஆகியவை உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன, 2.173.

      நபியே நீர் கூறுவீராக தானாகச் செத்தது அல்லது ஓட விடப்பட்ட இரத்தம் அல்லது பன்றி இறைச்சி ஏனெனில் அது ஓர் அசுத்தம் அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறிப் பாவமான முறையில் அறுக்கப்பட்டது ஆகியவை தவிர வேறு எதுவும் உணவு உண்பவருக்குத் தடை செய்யப்பட்டிருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வேத அறிவிப்பில் நான் காணவில்லை.6.145

 தானகச் செத்துப்போன பிராணியை உண்ணக்கூடாது எனும் தடை திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெறுகிறது எனினும் நீர்வாழ் பிராணிகளில் மீன் தானாகச் செத்துவிட்டாலும் அதைச்சாப்பிடலாம் என்று மீனை மட்டும் குறிப்பிட்டு ஹதீஸில் வருகிறது,
 ஆனால் செத்துப்போன மற்ற கடல்வாழ் பிராணிகளைச் சாப்பிடலாம் என்று தெளிவாக வெளிப்படையாக எங்கும் வரவில்லை, எனவே தானாகச் செத்தவை தடுக்கப்பட்டவை ஹராம் என்ற பொதுச் சட்டத்திலிருந்து குறிப்பிட்டுத் தெளிவாகச் சொல்லப்பட்ட மீனை மட்டும் விதிவிலக்கு செய்வதுதான் சரியானது என்ற முடிவுக்கு இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களும் அவர்களின் மாணவர்களும் வந்துள்ளனர். ஏனெனில் குர்ஆனில் இடம் பெறுகின்ற பல வசனங்களையும் ஒன்று சேர்த்துத தான் முடிவுக்கு வரவேண்டும் என்பது பொதுச்சட்டம் ஆகும்.
          மேற்கண்ட 7.157 ஆவது வசனத்தில் தூய்மையானவை தய்யிபாத் என்றும் அதன் எதிர்ச்சொல்லாகிய தீங்கானவை கபாயிஸ் என்றும் அல்லாஹ் தெளிவாக்க் கூறியுள்ளான்.
    
 அருவருப்பான அசுத்தமானவை ஹராம் என்ற அடிப்படையில்தான் பாம்பு, முதலை, ஆமை, தவளை முதலியன அசுத்தமானவை என்றும் அவற்றைச் சாப்பிடுவது கூடாது என்றும் இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
     எனவே தூய்மையற்றவை என்ற பொதுச்சட்டத்திலிருந்து இவற்றுக்கு விதிவிலக்கு அளித்து இவற்றையும் உண்ணலாம் என்று கூறவேண்டுமானால் அதை வெளிப்படையாகக் குறிப்பிடுகின்ற குர்ஆன் வசனமோ, ஹதீஸோ இருக்க வேண்டும். அவ்வாறு குர்ஆனிலோ ஹதீஸிலோ வெளிப்படையாக எதுவும் வரவில்லை.

 மற்ற இமாம்கள் கருத்து

திருக்குர்ஆனின் 5.96 ஆவது வசனத்தில் கடலில் வேட்டையாடிய பிராணி அனுமதிக்கப்பட்டது ஹலால் என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில் கடல் பிராணிகள் அனைத்தும் அடங்கும் எனவே 7.157 ஆவது வசனத்தில் கூறப்பட்டுள்ள தூய்மையானவை தய்யிபாத் எனும் சொல்லில் கடல்வாழ் பிராணிகள் அனைத்தையும் சேர்த்து அவை அனைத்துமே அனுமதிக்கப்பட்டவை ஹலால் என்றே கூற வேண்டும் என்கிறார்கள்.

 அபூஹனீஃபா(ரஹ்) அவர்களின் பதில்

 5.96 ஆவது வசனத்தில் இடம் பெறும் கடல் வேட்டை ஸய்துல் பஹ்ரி எனும் சொற்றொடரின் சொற்பொருள் வேட்டையாடுதல் ஆகும். வேட்டையாடப்பட்ட பிராணிகள் என்பது அதன் நேரடிப் பொருள் அல்ல அவ்வாறு பொருள் கொள்ளும்போது நேரடிப்பொருளையும் விடுத்து மாற்றுப் பொருள் கொள்ளுதலாக அது அமையும். ஒரே நேரத்தில் நேரடிப்பொருளையும், மாற்றுப் பொருளையும் நாடுவது கூடாது என்பது இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்களின் கருத்தாகும். எனவே நேரடிப்பொருள் இருக்க மாற்றுப்பொருளை இங்கு நாட வேண்டுமா? என்பது கேளவ்விக்குரியது, 
  அவ்வாறே இரண்டு பொருள்களை நாடினாலும் அந்த மாற்றுப் பொருளில் கடல் வாழ் பிராணிகள் அனைத்தும் அடங்குமா? என்பது இன்னொரு பிரச்சினை இவ்விதமான உறுதியற்ற கருத்தைக் கொண்டு 5.96 ஆவது இறைவசனத்தில் கூறப்பட்ட தூய்மையற்றவை ஹராம் என்பதிலிருந்து பாம்பு முதலியற்றவை எப்படி விதிவிலக்குச்செய்ய முடியும்?

 இதற்கு மற்ற இமாம்களின் பதில்

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கடல் தண்ணீரில் அங்கத்தூய்மை உளூ செய்யலாமா என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கடல் நீர் தூய்மைப்படுத்தக்கூடியது. அதில் செத்தவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                                    ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம் – 64
இதிலிருந்து கடலில் தானாகச்செத்துப்போன பிராணிகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டவை ஹலால் என்று விளங்க முடியும் அல்லவா என்று கேட்கிறார்கள்.


இமாம் அபூஹனீஃபா ரஹ் பதில்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் தானாகச் செத்தவற்றில் இரண்டும் இரத்தங்களில்  இரண்டும் நமக்கு உண்ணஅனுமதிக்கப்பட்டுள்ளன. செத்த வற்றில் அனுமதிக்கப்பட்டவை மீனும், வெட்டுக்கிளியும் ஆகும். அனுமதிக்கப்பட்ட இரத்தங்கள் கல்லீரலும், மண்ணீரலும் ஆகும்,
     இந்த ஹதீஸில் தானாகச் செத்தது என்பதில் மீனை மட்டுமே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள். கடல்வாழ்ப்பிராணிகள் அனைத்தையும் அவர்கள் கூறவில்லை. கடலில் செத்தது ஹலால் என்ற ஹதீஸின் மூலம் மீன் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தானாகச்செத்தவை ஹராம் என்று வெளிப்படையாகவே குர்ஆனில் பல வசனங்கள் வந்துள்ளன.
     
 அதுமட்டுமின்றி கடல் பிராணிகளில் உயிருடன் பிடிக்கப்பட்ட பாம்பு, முதலை, ஆமை போன்றவற்றைச் சாப்பிடலாமா என்பதே கேள்விக் குறியாக இருக்கும் போது செத்தாலும் அவற்றைச் சாப்பிடலாம் என்று எதை வைத்துக்கூறுவது?

தவளை

ஒரு மருத்துவர் தவளையை மருந்துகளில் சேர்ப்பதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார் நபி(ஸல்) அவர்கள் தவளையைக் கொல்ல வேண்டாம் என்றார்கள்,
  இந்த ஹதீஸை இமாம் அபூதாவூத்(ரஹ்) அவர்கள் மருத்துவம் என்ற பாடத்திலும், நஸயீ(ரஹ்) அவர்கள் வேட்டை என்ற தலைப்பிலும் கொண்டுவந்துள்ளனர்.  இஃதன்றி இமாம் அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹ்). அபூதாவூத் அத்தயாலிசீ(ரஹ்) ஆகியோரும் அறிவித்துள்ளனர். இமாம் தாரிமீ(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
       
 நீரில் வாழும் பிராணிகளில் மற்ற பிராணிகளைச் சாப்பிடலாம் என்ற கருத்தில் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள், இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் கருத்துக்கு உடன்பட்டாலும், தவளையைச் சாப்பிடுவது கூடாது என்றே கூறுகிறார்கள்,
      
  ஏனெனில் அதைச் சாப்பிடவேண்டுமெனில் அதை அறுக்க வேண்டும் ஆனால் அதைக் கொல்லக்கூடாது என்று மேற்படி நபிமொழி தடை செய்கிறது என்பதே இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் நிலைப்பாட்டுக்கு காரணம் ஆகும்,
       
ஹனஃபீ மத்ஹபின் படியும் தவளையைச் சாப்பிடுவது கூடாது அவர்களும் இதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாக்க் கூறுகிறார்கள். அருவருப்பானவற்றைச் சாப்பிடக்கூடாது என்பதிலும் தவளை அடங்கும்.
     இமாம் பகாரீ(ரஹ்) அவர்கள் தவளையச் சாப்பிடலாம் என்பதற்கு இமாம் ஷஅபி(ரஹ்) அவர்களுடைய கூற்று ஒன்றைச் சான்றாகக் காட்டுகிறார்கள். மற்றவர்களோ ஹதீஸில் தெளிவாக வரும்பொழுது அதற்கு எதிராக ஒரு தாபிஈ அறிஞரின் சொல்லை எடுக்க வேண்டிய தில்லை என்கிறார்கள். மேற்கண்ட அந்த ஹதீஸை துறை சார்ந்த அறிஞர்கள் பலரும் எடுத்துக் கூறியுள்ளனர்.
     இமாம் புகாரீ(ரஹ்) அவர்களுக்கு ஹதீஸ் துறையில் உயர்ந்த தரம் உண்டு. அவர்கள் தமது நூலில் குறிப்பிடாத நபிமொழியை மற்றவர்கள் அதற்கும் மதிப்பு உண்டு, ஆதாரபூர்வமான ஹதீஸ் என்பதற்கான நிபந்தனையை அது பெற்றிருந்தால் போதும்.
     ஃபிக்ஹு சட்டத்தை ஆய்வு செய்யும் திறமையைப்பொறுத்த வரையில் இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் மற்ற இமாம்களைப் பின்பற்றுபவர்கள்தான். எனவே அவர்கள் மற்றவர்களுடைய ஆய்வை இஜ்திஹாதைத்தான் எடுத்துச்சொல்வார்கள்.
   இந்த அடிப்படையிலேயே ஸஹீஹுல் புகாரியின் ஒவ்வொரு பாடத்திலும் அந்தந்த பாடத்தலைப்பின்கீழ் அதற்கு ஏற்ற நபித்தோழர்கள் அவர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தாபிஉ அறிஞர்கள் ஆகியோரின் ஆய்வுக்கருத்தை எடுத்துரைப்பது அன்னாரின் வழக்கம்,
கடலிலுள்ள உண்பொருள்களில் மீனைத்தவிர மற்றவற்றைச் சாப்பிடுவது இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்களிடம் வெறுக்கத்தக்கது மக்ரூஹ் ஆகும், தடை செய்யப்பட்டது, ஹராம் அல்ல ஆனால் ஹாபிழ் முன்திரீ (ரஹ்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக்க் கொண்டு தவளைடயைச் சாப்பிடுவது ஹராம் என்றே எழுதுகிளார்,
    இப்போது இமாம் ஷஅபி(ரஹ்) அவர்களுடைய கூற்றைச்சற்று கவனிப்போம்,
எனது குடும்பத்தினர் தவளையை சாப்பிடுவார்களென்றிருந்தால் அவர்களுக்கு அதைச் சாப்பிடக் கொடுத்திருப்பேன் என்று அதைச் சாப்பிடுவதற்கு அவர்களுக்கு நான் அதைச் சாப்பிடக் கொடுக்கவில்லை என்ற கருத்து அதில் தொனிக்கிறது,
   அறுவருக்கத்தக்கது என்று கருதி இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்கள் மக்ரூஹ் என்று கூறினார்கள் என்று அவர்களின் ஆதரவாளர்கள் கூறலாம். இந்த வகையில் ஷஅபி அவர்களின் கருத்து தவளை மக்ரூஹ் என்ற கருத்துடைய மத்ஹபுக்கு முரணானது அன்று.
   இதையெல்லாம் எழுதியதின் நோக்கமே ஒவ்வொரு இமாமும் எவ்வளவு சிரமப்பட்டுச்சிந்தித்து ஆய்வு செய்து சட்டத்தைத் தொகுத்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதேயாகும், எனவே இவர்களில் யாரையாவது ஒருவரை குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாக தன்னிச்சையாக சட்டம் கூறியுள்ளார்கள் என்று குறை கூறுவாரேயானால் அது குறை கூறுபவரின் அறிவுக் குறைவையே வெளிப்படுத்தும்.
     இவ்விடத்தில் ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) கூறியதை எடுத்துக்கூறுவது பொருத்தமாக இருக்கும், இபுனுல் முன்திர் என்ற ஹதீஸ் வல்லுனர் சாப்பிடப்படும் பிராணிகளின் ஆடு, மாடு போன்றவற்றின் சாணமும், சிறுநீரும் துப்புரவானவை என்று கூறி அதற்கு ஆதாரமாகப் பின்வருமாறு கூறுகிறார் 

கடை வீதியில் உரத்திற்காக ஆட்டுப்புழுக்கை விற்கப்பட்டது. ஒட்டகையின் சிறுநீரை மருந்தில் சேர்த்தனர் ஆனால் அதை அன்றைய உலமாக்கள் தாபியீன்கள் தடுக்கவில்லை அது நஜீஸ் அசுத்தம் ஆக இருந்தால் தடுத்திருப்பார்கள்.
     
 அதற்கு இப்னு ஹஜர் பதிலளிக்கையில் கருத்து வேறுபாடுடைய பொருட்களை வியாபாரம் செய்தால் அதை மறுப்பது வழக்கமல்ல அதனால் யாரும் தடுக்கவில்லை என்பதை வைத்து பொதுவாக அந்த வியாபாரம் ஆகுமானது என்று விளங்குவது அதற்கும் மேலே போய் அது சுத்தமானது என்று விளங்குவது சரியல்ல என்று கூறியுள்ளார் 1-338  பத்ஹுல் பாரீ
   
 இதிலிருந்து ஒரு இமாம் கூறிய கருத்தை அவரைப் பின்பற்றாதவர் ஆட்சேபிப்பது வழக்கமல்ல என்று தெரிகிறது ஆகவே விரோதம் பாராட்டாமல் அவரவர் பின்பற்றுகின்ற இமாம்களின் சொல்படி செயலாற்றுவதே சிறப்புக்குரியது.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்