அவ்லியாக்களை ஜியாரத் செய்வது மற்றும்
அவர்களது உரூஸ்களை கொண்டாடுவதற்கான வழிமுறைகள் என்ன?
கப்ருகளை ஜியாரத் செய்வது உயர்ந்த சுன்னத்தான
காரியம். ஆண்களுக்கு ஏகோபித்த முறையில் நன்மையான காரியம் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) உரைத்துள்ளார்ர்கள். அதே போலவே ஜியாரத் பெண்களுக்கும் ஆகுமான நன்மையான
காரியமே. ஆனால் ஜியாரத்தின் போது அந்நிய ஆண்களுடன் கலந்துவிடாது
பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி
கலக்கும் நிலை இருந்தால் பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது.
இருபாலருக்கும் ஜியாரத் ஜாயிஸ் என்பதற்கு
குர்ஆன், ஹதீஸில் நிறைந்த ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக இறைத்தூதர்கள்,
இறைநேசச்செல்வர்கள் மஜார்களை தரிசிப்பது பாக்கியம் நிறைந்த நடைமுறையாகும். இவ்வாறே
இப்னு ஷிஹாபு ரமலீ போன்ற மார்க்க மேதைகள் ஆய்ந்தறிவிப்புச் செய்துள்ளனர்.
நமது முன்னோர்கள் அவ்லியாக்களுடைய தியாகங்களை
போற்றும் வகையில் அவர்களுடைய நினைவு நாட்கள் வரும்போது அந்நாட்களை சில
சடங்குகளுடன் கொண்டாடியுள்ளனர். அன்றைய கால சூழ்நிலைகளில் அவ்வாறு செய்திருக்க
வேண்டும். இன்றைய இஸ்லாமிய சமூகத்துக்கு பயன்தரும் வகையில் உரூஸ் விழாவை அமைத்துக்
கொள்ளலாம். இன்றைய மக்கள் குப்ரு ஷிர்கு பற்றி ஓரளவு தெளிவு பெற்றுள்ளனர். அதே
சமயம் இஸ்லாமிய மார்க்க ஞானத்தில் பின்தங்கியுள்ளனர். எனவே அவ்லியாக்களின் நினைவு
நாட்களில் ஜியாரத்தின் ஒழுங்குமுறைகளை சொல்லித் தருவதுடன் அனாச்சார செலவுகளை
தவிர்த்து மக்களின் மார்க்க விழிப்புணர்வுக்கு அந்நாட்களை பயன்படுத்திக்கொள்ள
வேண்டும்.
வானவேடிக்கைகள், பேண்டு வாத்தியங்கள்,
பல்லாயிரக் கணக்கில் செலவிட்டு மின் அலங்காரம் இதுபோன்ற வீண் விரயங்களை விட்டுவிட
வேண்டும். இதை சற்று நளினமாகச் செய்ய வேண்டும்.தமிழகத்திலுள்ள மரியாதைமிகு
மார்க்கமேதைகளை அழைத்து பல்வேறு தலைப்புகளில் பயான் பண்ணவைத்து இறைநேசச்
செல்வர்களின் வரலாற்றை எடுத்துரைக்க வேண்டும். அவர்களுடைய இறைபக்தியையும், ஈமானிய
உறுதியையும், தன்னலமற்ற சேவைகளையும் எடுத்தரைத்து அவர்கள் பாதையில் மக்களை நடக்கச்
செய்ய வேண்டும்.
அதே சமயம் அன்பியாக்கள், அவ்லியாக்கள்,
சஹாபாக்கள் தியாகங்களை இருட்டடிப்புச் செய்து அவர்களை அவமதிக்கும் அணியினருக்கு
அடிபணிந்து விடாமல் சுன்னத் வல் ஜமாஅத்தின் உயரிய கொள்கை கோட்பாடுகளை பாதுகாக்கும்
வகையிலேயே நிகழ்ச்சித் தொகுப்புகளும் அமைப்புகளும் இருக்க வேண்டும். அவற்றை
முறைப்படுத்தி எழுத்துப்பூர்வமாக பதிவு செய்திட வேண்டும். இல்லாவிட்டால்
பிற்காலத்தில் எந்த நன்மைகளும் நடைபெறாமலாகிவிடும்.
மவ்லூது ஷரீபு ஓதுவது, நேர்ச்சை பொருட்களை
விநியோகிப்பது, ஊர்மக்களிடம் வசூலித்த பணத்தில் அன்னதானம் வழங்குவது போன்ற
காரியங்கள் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டவை, வரவேற்கப்பட்டவையாகும்.
எனவே அவற்றை தொடர்ந்து கடைபிடிக்கலாம் அதில்
கலந்து கொள்ளும் நன்மக்களை கண்ணியப்படுத்தவும் செய்யலாம். உரூஸ் நிகழ்வுகளை
இன்னும் ஒழுங்குபடுத்தி இரவு காலத்தில் பிறருக்கு சிரமம் இல்லாதவாறு
நடைமுறைப்படுத்தலாம். முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் விளங்கிக் கொள்ளும்
வகையில் பல்வேறு தலைப்புகளில் முஸ்லிம் பிள்ளைகளை மேடையில் பேசச்செய்து
இஸ்லாத்துக்கு கண்ணியம் சேர்க்க வழிகோல வேண்டும்.
அல்லாஹ் நல்லருள்
புரிவானாக, ஆமீன்
இப்படிக்கு,
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி.